அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் மே 13ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, 'இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான்' என்று குறிப்பிட்டு பேசினார். இந்த பேச்சுக்கு பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், இந்து மத அமைப்பினரும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் மனு - முதல் தீவிரவாதி ஒரு இந்து
சேலம்: 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்துதான்' என்று பேசிய கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாநகர காவல் ஆணையரிடம் பாஜகவினர் புகார் மனு அளித்தனர்.
காவல் ஆணையரிடம் மனு
இந்நிலையில், கமல்ஹாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் பாஜகவினர் புகார் மனு இன்று அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்துக்களின் மனதை புண்படும்படி நடிகர் கமல்ஹாசன் பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தேர்தல் ஆணையமும் கமல்ஹாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்", எனவும் கேட்டுக் கொண்டனர்.