சேலம் மாவட்டத்தின் மையப்பகுதியில் ஓடும் பிரதான ஆறான திருமணி முத்தாறு சாக்கடைகளாலும், சாயப்பட்டறைக் கழிவுகளாலும் நிரம்பியுள்ளது. இந்த ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், திரும்பும் திருமணி முத்தாறு என்ற பெயரில் பாஜக விவசாய அணி சார்பில் ஒரு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.
இந்த கையெழுத்து இயக்கத்தை அக்கட்சியின் விவசாய அணி தலைவர் நாகராஜ் தொடங்கிவைத்துவிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, " சேலத்தின் திருமணி முத்தாறு சாக்கடை மற்றும் சாயக்கழிவு நிறைந்து ஓடும் கழிவு ஆறாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுத்தப்படுத்தி நிலத்தடி நீரை பாதுகாக்கவும் விவசாயிகளை பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாஜக சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெறும்.
பாஜக விவசாய அணி தலைவர் நாகராஜ் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட வேண்டும். மேட்டூர் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதிமுகவினருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள ஏரிகளில் மட்டுமே நீர் நிரப்பப்பட உள்ளதாக தெரிகிறது. எனவே அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் மக்களுக்கும் உபரி நீர் சென்று சேரும் வகையில் தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
திரும்பும் திருமணி முத்தாறு கையெழுத்து இயக்கம் கூட்டணி வேறு போராட்டங்கள் வேறு. மக்களின் நலனுக்காக பாஜக தொடர்ந்து பணிகள் செய்யும். வாகனங்கள் அதிக அளவில் பெருகிவிட்டதால் எட்டு வழி சாலை திட்டம் தேவை. அந்த திட்டம் நிறைவேற்றப்படுவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. இத்திட்டத்தால் சேலம் மாவட்டத்தின் தொழில் வளம் பெருகும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: உபரி நீரால் மூழ்கிய கொசஸ்தலை ஆற்று தரைப்பாலம்