சேலம் பொன்னம்மாப்பேட்டை என்ஜிஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (51). இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு பிரகாஷ், பிரபு என்ற இரண்டு மகன்களும், விமலாதேவி என்ற மகளும் உள்ளனர். சரவணன் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவந்தார்.
இதற்கிடையில், கரோனா காலத்தில் வருமானமின்றி இருந்த அவர் கடன் சுமையால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், வாங்கி 20 ஆண்டு காலம் ஆன வாகனங்கள் காலாவதி என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையறிந்த சரவணன், வேதனையடைந்து சக நண்பர்களிடம் புலம்பிய நிலையில், பிப்ரவரி மூன்றாம் தேதி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவ செலவுகள் அதிகரித்ததால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (பிப். 12) அதிகாலை சரவணன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது ஆட்டோ கடந்த 2001ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கடன் தொல்லை: பெட்ரோல் ஊற்றி ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை முயற்சி