கள்ளக்குறிச்சி: நைனார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. இவர் தனது கணவருடன் உலகியநல்லூர்யிலுள்ள சகோதரர் சிவா வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை (அக்.24) சென்றுள்ளார். விடுமுறை நாள் என்பதால் சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் அண்ணா சிவாவின் குடும்பத்தினருடன் கல்வராயன் மலை தொடர்ச்சியில் ஆத்தூர் முட்டல் பகுதியிலுள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா பயணிகளுடன் இவர்களும் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்துள்ளனர்.
சிவரஞ்சனி தனது அண்ணன் குழந்தை சுஜியை எடுத்துக் கொண்டு கரையின் எதிர்ப்புறத்திற்கு சென்று விளையாட்டு காட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிவரஞ்சனி, குழந்தை சுஜி இருவரும் சிக்கிக் கொண்டனர்.
பதைபதைக்கும் சம்பவம்
இதனைக் கண்ட சிவரஞ்சனியின் அண்ணன் சிவா, இளைஞர்கள் அப்துல்ரகுமான், லட்சுமணன் ஆகிய மூவரும் வேட்டி, துப்பட்டா கொண்டு வெள்ளத்தில் சிக்கிய இருவரையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் இளைஞர்கள் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்ததில் இருவரும் 100 மீட்டருக்கு அடித்து செல்லப்பட்டு பின் நீந்தி கரை சேர்ந்தனர்.