தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி - காவல்துறையினர் தீவிர விசாரணை!

சேலம் : ஞாயிறு முழு ஊடரங்கை பயன்படுத்தி, சேலம் நான்கு ரோடு பொதுத் துறை வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சியில் இருவர் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி - காவல்துறையினர் தீவிர விசாரணை !
சேலம் ஏ.டி.எம்மில் கொள்ளை முயற்சி - காவல்துறையினர் தீவிர விசாரணை !

By

Published : Aug 25, 2020, 3:51 PM IST

சேலம் மாநகரம், 4 ரோடு பகுதியில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையம் இயங்கி வருகிறது. நிர்வாக நடவடிக்கை காரணமாக, அந்த ஏ.டி.எம். மையம் நேற்று (ஆக.25) மாலை மூடப்பட்டு இருந்தது. பின்னர், அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் தீர்ந்து போனதை அறிந்த தனியார் ஏஜென்சி ஊழியர்கள் இயந்திரத்தில் பணம் வைக்க வந்தனர்.

அப்போது மூடி இருந்த ஷட்டரை திறந்து பார்த்த போது, இயந்திரத்தின் ஒரு பகுதியில் வெல்டிங் மூலம் உடைக்க முயற்சி நடந்து இருப்பதையும், உட்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்கள் உடைக்கப்பட்டு இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, உடனடியாக ஏஜென்சி ஊழியர்கள் இது குறித்து வங்கி அலுவலர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் உடனே சேலம் மாநகர குற்றப் பிரிவு துணை ஆணையர் செந்தில், வடக்கு சரக உதவி ஆணையர் அனந்தகுமார், அஸ்தம்பட்டி காவல்துறை ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, ஏ.டி.எம். இயந்திரத்தை ஆய்வு செய்தனர். உடைக்கப்பட்ட கேமராவில் மேற்கொண்ட ஆய்வில், இரண்டு மர்ம நபர்கள் வெல்டிங் மிஷின் உதவியால் நேற்று முன்தினம்(ஆக.23) கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளையில் ஈடுபட முயற்சித்த நபர்கள் பணத்தை எடுக்க முடியாமல், பாதியிலேயே தப்பி ஓடியுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த, ஆறு லட்சம் ரூபாய் ரொக்கம் தப்பியது குறிப்பிடத்தக்கது. காணொலி காட்சியில் பதிவான அடையாளம் தெரியாத அந்த இரண்டு நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் ஆள் நடமாட்டம் உள்ள நான்கு ரோடு பகுதியில் ஞாயிறு முழு ஊரடங்கை பயன்படுத்தி, ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details