சேலம்: காடையாம்பட்டி அருகேவுள்ள ஜோடுகுளி என்ற இடத்தில் யூனியன் பாங்க் மற்றும் இந்தியா ஒன் ஆகிய வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று ( மே 05 ) அதிகாலை சுமார் 3 மணி அளவில் அந்த ஏடிஎம்களில் இந்தியா 1 ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள பணத்தை கொள்ளை அடிப்பதற்காக மூன்று பேர் கொண்ட கும்பல் மையத்திற்கு சென்றுள்ளனர்.
அவர்களில் ஒருவரை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே இரண்டு பேர் சென்று கேஸ் சிலிண்டரை வைத்து வெல்டிங் மெஷினால் அறுத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்து கேட்ட சத்தத்தை வைத்து கொள்ளை முயற்சி நடப்பதை உணர்ந்து உள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது, ஏடிஎம் மையத்தின் வெளியே காவலுக்கு இருந்த நபர் அங்கிருந்து, இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து இரண்டு திருடர்கள் உள்ளே இருக்கும் நிலையில் பொதுமக்கள் உடனடியாக ஏடிஎம் கதவை மூடி அவர்களை சிறைப் பிடித்தனர்.
பின்பு தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், உள்ளே இருந்த இரண்டு வட மாநிலத்தவர்களை பிடித்து தீவட்டிப்பட்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் வருவதற்குள் ஏடிஎம் கதவை வெல்டிங் மிஷின் மூலம் அறுத்துக் கொண்டு தப்பிக்க இரண்டு பேரும் முயற்சி செய்தனர். ஆனால், அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தீவட்டிப்பட்டி காவல் துறையினர், 2 வடமாநிலத்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் சாதுர்த்தியமாக பொதுமக்கள் திருடர்களை பிடித்து கொடுத்ததால் ஏடிஎம்மில் இருந்த பணம் காப்பாற்றப்பட்டது. இந்த ஏடிஎம் கொள்ளை முயற்சி சம்பவத்தையடுத்து சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையங்கள் முன்பு காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:'சதுரங்க வேட்டை' பாணியில் பலே திட்டம்.. 4 பேரை கைது செய்த போலீஸ்.. சென்னையில் நடந்தது என்ன?