தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எடப்பாடியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; வெள்ளத்தில் மூழ்கிய பயிர்கள்...

எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருவதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது, மற்ற விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

By

Published : Oct 16, 2022, 7:49 PM IST

எடப்பாடியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு
எடப்பாடியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

சேலம்: எடப்பாடியை அடுத்த அரசிராமணி கிராமம், பட்டக்காரனூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதியில் மக்கள், பாரம்பரியத் தொழிலான விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பெய்து வரும், தொடர் கனமழையால், எடப்பாடியைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, அதன் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

இதையடுத்து, உபரிநீரும் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே, நேற்றிரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் மழைநீர் தேங்கி, வெளியே செல்ல முடியாமல், நெற்பயிர்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. மேலும், சாலையிலும் நீர் செல்வதால், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில், கனமழையால், வெள்ளரி வெள்ளி ஏரி நிரம்பியுள்ளதாகவும், இதனால், அதிலிருந்து வெளியேறும் உபரிநீரானது ஓடை மூலம் வேட்டுவப்பட்டி, காதாட்டியூர், ஆதிகாரிப்பட்டி, பட்டக்காரனூர் வழியாக குள்ளம்பட்டி ஏரியில் கலப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அந்த ஓடைகளை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாகவும், இதனால், உபரிநீர் மற்ற விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாயத்தை பாதிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதுவரை எந்த ஒரு அலுவலர்களும், நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகின்றனர்.

எடப்பாடியில் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு

எனவே, ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்லும் நீர் வழிப்பாதையை தூர்வாரி கொடுக்க வேண்டுமெனவும், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details