சேலம்: தேர்தல் பரப்புரை மேற்கொள்ள சேலம் மாவட்டத்திற்கு வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து நேற்று (மார்ச் 24) ஆலோசனை நடத்தினார்.
சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தனியார் உணவக விடுதியில் நடந்த இந்த ஆலோசனை சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. அவர்கள், தேர்தல் சுற்றுப்பயணம் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்ததாகத் தெரிகிறது.
சசிகலா ஆதரவை கேட்கலாமா...? மேலும், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அண்மைக் காலமாக அரசியலிலிருந்து விலகி இருக்கிறார். அதிமுக அரசு மீது அவருக்குப் பெரியதாக அதிருப்தி ஏதும் இல்லை என்று தெரிகிறது.
அமமுக வேட்பாளர்கள் பிரிக்கும் வாக்குகள் அதிமுக வேட்பாளர்களுக்கு கிடைக்க சசிகலா மனதுவைக்க வேண்டும். எனவே அவரை எப்படியாவது சந்தித்து ஆதரவு கிடைக்க முயற்சி செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் தீவிர ஆலோசனை செய்ததாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த ஆலோசனையை முடித்த பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கரூரில் பரப்புரை மேற்கொள்ள புறப்பட்டுச் சென்றார். இதைத்தொடர்ந்து மாலை எடப்பாடி பகுதிக்குச் சென்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சரை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
அதேபோல சேலம் மாவட்ட அதிமுக, பாமக வேட்பாளர்களையும் ஆதரித்து ஓ. பன்னீர்செல்வம் பரப்புரைசெய்து வாக்குகள் சேகரித்தார். தொடர்ந்து தர்மபுரியில் பரப்புரையில் ஈடுபட்டார்.