சேலம்:பஞ்சாப் மாநிலம், பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்றைய முன்தினம் (ஏப்ரல் 12) காலை திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்காடு கிராமத்தைச் சேர்ந்த கமலேஷ் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த வீரர்களுக்கு நேற்று (ஏப்ரல் 13) பிரேதப் பரிசோதனை நிறைவு பெற்றது.
இதனைத் தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரர்களின் உடல்கள், நேற்று மாலை சொந்த ஊர்களுக்கு கொண்டு வரப்பட்டது. இவர்களில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கமலேஷ் உடல், பஞ்சாபில் இருந்து விமானம் மூலமாக கோயம்புத்தூருக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு ராணுவ அதிகாரிகள் சார்பில், கமலேஷின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு இருந்து அவரது சொந்த ஊரான சேலம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி பனங்காடு கிராமத்திற்கு கமலேஷின் உடல் எடுத்து வரப்பட்டது.
அப்போது உயிரிழந்த ராணுவ வீரர் கமலேஷுக்கு அரசு மரியாதை வழங்க வேண்டும் என்று கூறி, உடல் எடுத்து வரப்பட்ட ஆம்புலன்ஸ் முன்பாக மேச்சேரி, வனவாசி பிரதான சாலையில் கிராம மக்கள் மற்றும் அவரது உறவினர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே காவல் துறையினரிடம், கிராம இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.