சேலம்:பாஜக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சோலைக்குமரன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், தன்னுடன் 2000-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் இணையத் தயாராக உள்ளதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பாஜகவின் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த குட்டி (எ) சோலைக் குமரன், 'சேலம் மாவட்டத்தில் பாஜக செயல்படவில்லை எனவும் கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை' எனவும் கூறி, தான் பாஜகவில் தொடரப்போவதில்லை எனவும் அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று (மார்ச்.23) பேசிய அவர், 'சேலம் மாவட்டத்தில் பாஜக முற்றிலும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகி வருவதாகவும், இதற்கு காரணம் இங்கு உள்ள மாவட்ட தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தான் எனவும் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் கிழக்கு மாவட்டத்தில், தன்னைப் போல ஏராளமான பாஜக நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதால் தான் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாவட்டத் தலைவர் நெருக்கடி:தன்னை போல், இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த கட்சியை விட்டு இன்று முதல் வெளியேறி உள்ளதாகவும், தனது தலைமையில் கட்சிக்கு வந்த அனைவருமே தற்பொழுது பாஜகவை விட்டு வெளியேறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சேலம் கிழக்கு மாவட்டத்தில், கட்சி பணிகள் செய்வதற்குத் தடை மற்றும் குளறுபடிகள் ஏற்படுத்தி, மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சி வளர்ச்சியை தடுத்து வருவதாகவும் அவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதனால், அந்தக் கட்சியில் தொடர்வதில் பலனில்லை என்று முடிவு செய்துதான் விலகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.