சேலம்: காடையாம்பட்டி வட்டம், தாராபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊர் கவுண்டன் கொட்டாய் பகுதியில் பழுதடைந்த நிலையில், அங்கன்வாடி மையம் 20 வருடத்திற்கு மேலாக தனியாருக்கு சொந்தமான இடத்தில், இரண்டு சிறிய அறைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரையானது ஆஸ்பெட்டாஸ் அட்டையால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டும், காற்றோட்டம் இல்லாமலும் வெயில் நேரத்தில் கடுமையான புழுக்கத்திற்கு மத்தியிலும் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு குழந்தைகளுக்கு கழிப்பறை வசதிகள் கூட இல்லாத அவலநிலை உள்ளது. இந்த வகையில் பாதுகாப்பற்ற சூழலில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பாதுகாப்பு இல்லாத அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் செய்து, அரசுக்கு சொந்தமான நிலத்தில் புதிய கட்டடம் அமைத்து பாதுகாப்பான சூழ்நிலையில் செயல்படுத்த வேண்டும் என ஊர்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி வார்டு உறுப்பினர் ராஜாமணி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்,' நான்கு வருடத்திற்கு மேலாக, இந்த பகுதியில் வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருவதாகவும், சுமார் ரூ.1000 மாத வாடகையில் 20 வருடத்திற்கு மேலாக தனியாருக்கு சொந்தமான நிலத்தில் இரண்டு அறைகள் அமைக்கப்பட்டு ஆஸ்பெட்டாஸ் கூரை கீழே இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது எனவும், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருவதாகவும், எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை’ எனக் கூறினார்.