பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு சேலம்:பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மார்ச் 1), சேலத்தில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 70-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சேலம் மாவட்டத்தில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தை பனமரத்துப்பட்டி ஏரி உள்ளிட்ட, மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளை நிரப்ப நீட்டிப்பு செய்து முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் நீர் பாசனத் திட்டத்திற்காக 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். உலக வங்கி உள்ளிட்ட பல்வேறு நிதி அமைப்புகள், நன்கொடையாளர்களிடம் இருந்து நிதி திரட்டி, நீர் பாசன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.
சேலத்தில் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மாவட்டத்தில் பூக்கள் விளைச்சல் அதிகமாக உள்ளதால், குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும். மாநிலத்தில் 1.30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளனர். விவசாய தோட்டக்கலைத் துறை மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும்.
சேலம் உருக்காலை திட்டத்தில் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. தற்போது 500 ஏக்கரில்தான் ஆலை செயல்பட்டு வருகிறது. உருக்காலையை தனியார்மயப்படுத்துவதை எந்த காலத்திலும் அனுமதிக்க மாட்டோம். மீதமுள்ள 3,500 ஏக்கர் நிலத்தை, நிலம் அளித்த விவசாயிகளுக்கே வழங்க வேண்டும் அல்லது மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
சேலம் விமான நிலையம் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் மாநகராட்சி, ஏற்காடு அடிவாரத்தில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க வேண்டும். இல்லையெனில், பாமக சார்பில் குப்பை வண்டிகளை நிறுத்திப் போராட்டம் நடத்துவோம். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்துக்கு 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தக் கூடாது.
இப்பிரச்னைக்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த ஆண்டு நாடாளுமன்ற அறிக்கையில், பொது நிறுவனங்களை விற்கப் போவதாக அறிவித்து, பின்னர் எதற்காக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும்? இப்பிரச்னைக்கு தீர்வு காணாவிட்டால், போராட்டம் நடத்த உள்ளோம்.
நான் சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்துவேன். அன்னூரில் 1,500 ஏக்கர் நிலத்திற்கு குரல் கொடுக்கும் பாஜக மற்றும் அதிமுக கட்சியினர், விவசாய சங்கங்கள் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைக்கும் குரல் கொடுக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டை தடை செய்யும் மசோதாவிற்கு ஆளுநர் இதுவரை கையெழுத்திடாமல் உள்ளார்.
சுமார் 3 மாதங்கள் ஆன நிலையில், ஆன்லைன் விளையாட்டால் 15 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விவகாரம், தாமதம் செய்யும் ஆளுநருக்கும், ஆன்லைன் நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாடு அரசும் மெத்தனமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு, 162 என்ற சட்டப்பிரிவின் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விஷயத்தில் முதலமைச்சர் கவனம் செலுத்திட வேண்டும். மேலும் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது.
கடந்த ஒரு மாதமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. அங்கு நடைபெற்ற பல்வேறு செயல்களை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து கனிம வளங்களை வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். அதானி குழும முறைகேடு குறித்து மத்திய அரசு விசாரிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் தயக்கம் காட்டக் கூடாது. தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். அந்த வகையில் 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி வியூகம் அமையும். மக்களவைத் தேர்தலுக்கு 5 மாதங்களுக்கு முன்பு கூட்டணி குறித்து அறிவிப்போம். பாஜகவுடன் பாமக கூட்டணி என்பதை யாரும் நம்ப வேண்டாம்.
டாஸ்மாக் கடைகளை அரசு மூட வேண்டும். மக்களைப் பற்றி கவலைப்படாத அரசாக செயல்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் முதலமைச்சர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்திற்குச் செல்லும் சூழல் ஏற்படும்” என்றார்.
இதையும் படிங்க:"விவசாயத்திற்கு தனி பட்ஜெட் வெளியிடும் அரசு, மறுபுறம் விளை நிலங்களை கையகப்படுத்துகிறது" - அன்புமணி!