டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் புகழேந்தி. கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராக அக்கட்சியில் அவர் பொறுப்பு வகித்து வந்தவர் . இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு டிடிவி தினகரனுடன் புகழேந்திக்கு கருத்து முரண்பாடு ஏற்பட்டது.
அது தொடர்பாக அவர், கட்சியினர் மத்தியில் பேசிய ஆடியோ, வீடியோ பதிவுகள் சமூகவலைதளங்களில் பரவி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் தினகரனுக்கும் புகழேந்திக்கும் மோதல் பெரியதாக வெடித்து இருவரின் அரசியல் உறவில் விரிசல் விழுந்தது. இதனையடுத்து புகழேந்தி கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனையும் நடத்தி வந்தார்.
இந்நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நேற்று நேரில் சந்தித்த புகழேந்தி, விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இல்லம் அருகே காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’ 35 ஆண்டுகால நண்பர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சியை எப்படி வழிநடத்தி மாபெரும் வெற்றிகளை கொடுத்தார்களோ அதேபோல எடப்பாடி பழனிசாமி இந்த முறை நடந்த இடைத்தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறார். கட்சியையும் ஆட்சியையும் பாதுகாத்து வைத்திருக்கிறார். அதைத்தான் சசிகலாவும் விரும்புவார்.
இப்போதும் நான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தான். டிடிவி தினகரன் கதை முழுவதுமாக முடிந்து விட்டது. அவர் இனி தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது. அவர் சந்திக்கின்ற கடைசித் தேர்தல் உள்ளாட்சித் தேர்தலாகத்தான் இருக்கும் . வரும் உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின்னால் அவர் இருக்க மாட்டார், கட்சியும் இருக்காது'' என்று மனதில் இருந்ததை எல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் புகழேந்தி.
சில மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து அதிமுகவில் ஐக்கியமான இசக்கி சுப்பையா, சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர் .
இசக்கி சுப்பையா அதிமுகவில் இணைந்த போது டிடிவி தினகரன் அளித்த பேட்டி ஒன்றில் , " இசக்கி சுப்பையா தன்னுடைய சுய நலனுக்காக அதிமுகவில் இணைந்து இருக்கிறார் . புகழேந்தி என்னுடைய 28 ஆண்டு கால நண்பர் . அவர் இணைந்திருந்தால் நான் ஏனென்று கேட்டிருப்பேன். வருத்தம் இருக்கும் " என்று தெரிவித்திருந்தார்.
தினகரனின் நெருங்கிய நண்பராக வலம் வந்த புகழேந்தி, இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து , பேசி இருப்பது அதிமுக மற்றும் அமமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.