தமிழ்நாடு முழுவதும் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது சேலம்:சேலத்தில் லாட்டரி விற்பனையை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி வீடியோ வெளியிட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பெரியசாமி மீது நேற்று கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் படுகாயம் அடைந்த பெரியசாமி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன் கூறுகையில், “ஆளை கொலை செய்யும் அளவிற்கு கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அந்த அளவிற்கு சமூக விரோத செயல்கள் இங்கு அதிகரித்துள்ளது. காலை 9.30 மணியளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்தபோதே இதுபோன்ற தீயசக்திகள் செயல்பட்டு வருகிறது என்றால், சமூக விரோத சக்திகள் சேலத்தில் தங்கு தடையின்றி உள்ளன என்று தெரிகிறது.
சேலத்தில் காவல் துறை இருக்கிறதா என்பதே ஒரு கேள்விக் குறியாக உள்ளது. இல்லையென்றால் அவ்வளவு தைரியமாக பட்ட பகலில் கொலை வெறி தாக்குதல் நடத்த தைரியம் வராது. தாக்குதல் நடத்தியவர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஒரு வலுவான பிணைப்பு இருப்பதால் இது போன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. காவல் துறையினர் லாட்டரி விற்பனையை தடுக்காமல் இருந்ததால்தான் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.
லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல் துறையினர் ஏன் கைது செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள்? அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் என்ன உறவு உள்ளது என்பதை நான் பகிரங்கமாக கேள்வியாக கேட்கிறேன். பல ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக தற்போது லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாயை தனி நபர்கள் வருமானமாக ஈட்டி வருகின்றனர்.
சேலத்தில் மட்டும் கள்ளத்தனமான லாட்டரி விற்பனை நடைபெறவில்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுபோல் ஏழை, எளிய மக்களை கொள்ளை அடிக்கக் கூடிய கள்ளத்தனமான லாட்டரி விற்பனையை தடுக்க வேண்டும். லாட்டரி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல நூறு கோடி ரூபாய் பணப் புழக்கம் இதில் ஏற்படுகிறது. பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். எனவே, அதன் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பெரியசாமி மீது தாக்குதல் நடத்திய சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் துடைப்பிற்காக தாக்குதல் நடத்தியவர்களை விட்டுவிட்டு, கணக்கிற்காக சிலரைக் கைது செய்யக்கூடாது.
இந்த தாக்குதலில் பின்பு உள்ளவர்கள் யார் என்பதை ஏன் காவல் துறையினர் விசாரணை செய்ய மறுக்கிறார்கள்? தாக்குதல் நடந்த பிறகு அதனை ஈடு கட்டுவதற்காக காவல் துறையினர் இந்த வழக்கை திசை திருப்புகின்றனர். உண்மை குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கில் சேலம் காவல் துறை செயல்படுகிறது. அது ஏற்புடையதாக இல்லை.
இந்த தாக்குதலில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் சமூக விரோதிகள்தான். அது திமுக, அதிமுக என அரசியல் கட்சியினர் யாராக இருந்தாலும் சரி. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் சமூக விரோதிகள்தான். கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்பவர்களை வேறு எவ்வாறு கூறுவது? அவர்களை புனிதமானவர்கள் என்று கூறுவதா அல்லது யோக்கியர்கள் என்று கூறுவதா? லாட்டரி விற்பனையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருமே சமூக விரோதிகள்தான்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:Tomato: ஹெல்மெட் வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் - பிரபல நடிகர் தொடங்கி வைப்பு!