சேலம்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் முப்பெரும் விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஓபிஎஸ்-ன் ஆதரவாளர் புகழேந்தி கலந்து கொண்டார். விழாவில் உரையாற்றிய அவர், "பாஜக தலைவர் அண்ணாமலையின் மீது எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் வருகிறது? கொள்ளையடித்தவர்களை விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியதில் என்ன தவறு உள்ளது? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் காமராஜ் உணவுத்துறையை கவனித்த போது, அவர் ஊழல் செய்ததாக நான் புகார் கொடுத்து 7 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஊழலில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.
காமராஜ் மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திமுக ஆட்சிக்கு முன்பாக ஊழல் செய்த அதிமுகவினரை சிறைக்கு கொண்டு செல்வேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது ஏன் அவருக்கு இந்த மெத்தனப்போக்கு என்று தெரியவில்லை. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல், கொடநாடு விவகாரம் உள்ளிட்டவை பற்றி அண்ணாமலை பேசியிருக்க வேண்டும். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது 46 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் புகார் உள்ளது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக ஆட்சியை பார்த்து அண்ணாமலை கேள்வி கேட்க வேண்டும். அதன்பிறகு திமுக அரசு பற்றி பேச வேண்டும்.
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்கு ஆண்டுகள் செய்த ஊழல் போன்று, உலகத்தில் எங்கும் ஊழல் நடந்தது இல்லை. எனவே பழனிசாமியை சிறைக்கு அனுப்பும் வரை அண்ணாமலை போராட வேண்டும். எடப்பாடி பழனிசாமி சிறைக்கு செல்லும் நாள் எண்ணப்பட்டு வருகிறது. அதன் பிரதிபலிப்பு தான் சத்தமாக பேசி அண்ணாமலையை அவர் அடக்கப் பார்க்கிறார். அண்ணாமலை இதுக்கெல்லாம் அடங்கமாட்டார், அண்ணாமலை ஒரு நிலையாக நின்று உறுதிமொழி ஏற்றுவிட்டார்.