சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, கொங்கு பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் திருவிழாவாக, மங்கை வள்ளி கும்மி குழுவின் 75வது பவள விழா அரங்கேற்றத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கும்மியாட்ட நிகழ்ச்சியைத் துவக்கிவைத்து, வாழ்த்தினார்.
அப்போது பேசிய அவர், ''2000 ஆண்டுகள் பழமையான இந்த கொங்கு பாரம்பரிய கும்மியாட்ட கலை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின்போது நாட்டுப்புற பாடல் பாடி ஆடுவது தான் இதன் சிறப்பம்சம். பல்வேறு இடங்களில் இந்த கலையை நடத்தி வரும் கலைஞர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொங்கு மண்டலத்தில் கோவில் திருவிழாக்களின் போதும், குடமுழுக்கின்போதும், திருமண நிகழ்ச்சியின் போதும் பெண்கள் ஒன்று கூடி பாடுவது மட்டுமல்லாமல், பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் கலந்து கொண்டு கிராமிய கலையை ஊக்குவிக்கும் விதமாக, அனைவரையும் ஈர்க்கும் அற்புதமான கலை ஆகும். நமது பாரம்பரிய கலையான கும்மி கலை புத்துயிர் பெற்று வருவதை கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகின்றோம்.
இதையும் படிங்க:கம்போடிய தேர்தல்: ஆசியாவிலேயே நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த பெருமையைப் பெறுகிறார் ஹுன் சென்!
திரைப்படம், ரேடியோ, தொலைக்காட்சி போன்ற விஞ்ஞான வளர்ச்சியினால் அழிந்து வரும் கும்மியாட்ட கலையை வளர்க்க வேண்டும் என்ற நமது முன்னோர்களின் கனவை நமது சகோதரிகள் நிறைவேற்றி வருகிறார்கள். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது இந்த கும்மியாட்ட கலையை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு அதிமுக உறுதுணையாக இருக்கும்'' எனப் பேசினார்.
இந்த கும்மியாட்ட கலை நிகழ்ச்சியில் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுமிகள் பங்கேற்று கும்மி ஆட்டம் ஆடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கேசி.கருப்பண்ணன், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம், சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களை தமிழகத்திற்கு பயிற்சி எடுக்க அழைப்பு விடுத்த முதலமைச்சர்!