சேலத்தில் நடைபெற்றுவரும் இஸ்லாமிய அமைப்பினரின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் பங்கேற்றார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதை போன்று தமிழ்நாட்டிலும் அதிமுக அரசு நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் பலர் உயிரிழந்ததற்கு காரணமான கலவரக்காரர்களோடு சேர்ந்து செயல்பட்ட காவல் துறையினர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடியும் பதவி விலக வேண்டும். சட்டத்தை திரும்பப் பெறும்வரை இஸ்லாமியர்களின் போராட்டம் தொடரும்.