சேலம்: தமிழகம் முழுவதும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. காய்கறிகள், தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் இல்லத்தரசிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை எளிய குடும்பத்தினர் இந்த விலைவாசி உயர்வால் மிகப்பெரிய அளவிற்கு பாதிப்படைந்து உள்ளனர். இந்த நிலையில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, அதிமுக சார்பில் இன்று (ஜூலை 20) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அதிமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் தக்காளி, சின்ன வெங்காயம் மற்றும் பிற காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனைப் பற்றி ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக அமைச்சர்கள் யாருக்கும் கவலை இல்லை. மேலான்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து கேட்டதற்கு பக்கத்து மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கச்சொன்னார். தக்காளி விலை உயர்வுக்கு பக்கத்து மாநிலங்களை பார்ப்பதற்கு நாங்கள் உங்களை ஏன் அமைச்சராக்க வேண்டும்?" என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "அண்ணா எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்த போது தமிழகத்தின் விலைவாசியைக் கண்டித்து, 'கும்பி எரியுது, குடல் கருகுது' என்று வசனம் பேசிக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஆனால், இன்று உயர்ந்துள்ள விலைவாசியைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்காவது போராட்டம் நடத்தியுள்ளனரா?