சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலப்படத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி மனு வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சிகளில் மாற்றமில்லை.
உணவுப் பொருள்களில் தொடர்ந்து கலப்படம் நடந்துவருகிறது. கலப்படம் செய்பவர்கள், கவனிக்க வேண்டிய நபர்களைக் கவனிக்கும்விதத்தில், அதாவது அதிக அளவில் பணம் கொடுத்து, தொடர்ந்து கலப்படத்தைச் செய்துவருகிறார்கள். இதனால் நேர்மையாகத் தொழில் செய்யும் நபர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
உணவுப்பொருள்களை இப்படித் தான் தயார் செய்ய வேண்டும் என்ற முறையை மறந்து, எப்படி வேண்டுமானாலும் கலப்படப் பொருள் கலந்து தயார் செய்யும் நிலை தற்போது உருவாகியுள்ளது.