தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மாநில அளவில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் சம பலத்தில் வெற்றி கிடைத்தது. இதன் காரணமாக வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் வெற்றியைப் பெற்றாக வேண்டும் என்ற முனைப்போடு, ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் மிகவும் கவனத்தோடு செயல்படுத்தி வருகின்றன. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதிமுக கூட்டணியின் அரசியல் நகர்வுகள் முன்னணியில் உள்ளது.
மாவட்ட அளவிலான பதவிகளுக்கும் ஊராட்சி அளவிலான பதவிகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கையில் மாநில தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், சேலம் மாவட்ட அளவில் அதிமுக கூட்டணி பலத்தோடு இருப்பதால் சேலம் மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக பெறுவதற்கு அனைத்து கட்ட ஏற்பாடுகளையும் முழுவீச்சில் செய்துவருகிறது. முதலமைச்சர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால், சேலத்தில் அவரின் அரசியல் நகர்வுகள் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. ஆனால், சேலம் மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கூட்டணியிலுள்ள பாமக பெறுவதற்கு முழு முயற்சியையும் மேற்கொண்டுள்ளது.
இதனையறிந்த முதலமைச்சர், மாநகராட்சி மேயர் பதவியை அதிமுகவுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஈடாக சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியை பாமகவுக்கு வழங்குவதாகவும் தெரிவித்திருந்ததாகவும் நம்பத்தகுந்த அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் மூலம் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ரேவதி 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாமகவின் விருப்பம் ஓரளவு நிறைவேறியதாக சேலம் மாவட்ட பாமகவினர் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதில் திமுகவுக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றிய நிலையில், கடுமையான அரசியல் மோதல்கள் அங்கு நடந்தன. இதனையடுத்து வேறுவழியின்றி அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவியை திமுகவுக்கு மதிமுக விட்டுக்கொடுத்து சமாதானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இறுதியில் சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 18 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 288 மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், அதிமுக 37 இடங்களையும் கூட்டணிக் கட்சிகளான தேமுதிக 5 இடங்களையும் பாமக 39 இடங்களையும் தமாகா 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன.
இதில் திமுக 76 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 4 இடங்களையும் கம்யூனிஸ்ட் இரண்டு இடங்களையும் மதிமுக 1 இடத்தையும் கைப்பற்றியுள்ளன. சுயேச்சைகள் 29 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் அதிமுக 17 இடங்களையும் பாமக ஒரு இடத்தையும் பெற்றுள்ளது . மேச்சேரி , தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவிகளில் அதிமுக 18 இடங்களையும், பாமக 3 இடங்களையும், தேமுதிக இரண்டு இடங்களையும் பிடித்துள்ளன. திமுக 3 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 1 இடத்தையும் பிடித்துள்ளன. சுயேச்சை 1 இடத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கவுன்சிலர்களும் அதிமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக சார்பில் கரட்டூர் மணி கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் . அதேபோல துணைத் தலைவராக வைத்தியலிங்கம் முருகன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .