இளைஞருக்கு அடி கொடுத்த அதிமுகவினர் சேலம்:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அதிமுக சார்பில், விலைவாசி உயர்வைக் கண்டித்தும், துறைகள் தோறும் பெருகிவிட்ட ஊழல் முறைகேடுகளைக் கண்டித்தும், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க மறுக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து இன்று (ஜுன் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி, ஜெயசங்கரன், சித்ரா, பாலசுப்பிரமணியன், மணி, ராஜ முத்து மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சேலம் புறநகர் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டுறவு இளங்கோவன் மற்றும் சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்டம் முழுவதும் இருந்து அதிமுகவினர் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத நிலையைக் கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்க மறுக்கும் முதலமைச்சரின் செயலை கண்டித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. காலை 10:30 மணிக்குத் தொடங்கிய ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
இந்த நிலையில், சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, அதிமுக நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் நேரடியாகச் சென்று 200 ரூபாய் பணம் கொடுங்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். சிலர் 200 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொடுக்க முயன்ற போது அதை சதீஷ் வாங்க மறுத்துத் திரும்பிச் சென்றார்.
இதேபோல் தொடர்ந்து சதீஷ் அனைவரையும் தொந்தரவு செய்து வந்ததால் அதிமுக நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர். அப்போது சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் ஆர்ப்பாட்டம் முடித்துக் கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றார். அவரது கார் முன்பாக சென்ற சதீஷ், காரில் சாய்ந்தவாறு வெங்கடாசலத்திடமும் பணம் கேட்டார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அதிமுக நிர்வாகிகள் சதீஷை சரமாரியாக தாக்கினர். பின்னர் சதீஷின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சேலம் மாணவர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் காரில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தை விட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
இதனால் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் ஒருவரை, அதிமுகவினர் பணம் கேட்டார் என்பதற்காக, அவரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தலையில் அடித்து, சட்டையை பிடித்து இழுத்துச் சென்ற வீடியோ, சேலத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:திருச்சியில் 550 கிலோ கலப்பட தேயிலை தூள் பாக்கெட்டுகள் பறிமுதல்!