சேலம் மாவட்டம், தலைவாசல் அடுத்த வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளி கணேசன். இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (20).
கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தேர்வாகாததால், நவம்பர் 1ஆம் தேதி சுபாஷ் சந்திரபோஸ் நச்சு அருந்தி, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக சுபாஷ் சந்திரபோஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிகிச்சைப்பலனின்றி சுபாஷ் சந்திர போஸ் நவம்பர் 6ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து சுபாஷ்சந்திரபோஸ் குடும்பத்திற்கு கெங்கவல்லி சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெய்சங்கரன், ஓமலூர் சட்டப்பேரவை உறுப்பினர் மணி, சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் பாலசுப்ரமணியன், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜமுத்து ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.
தொடர்ந்து இன்று (நவம்பர் 8) மேற்கூறிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகத்தைச் சந்தித்து, சுபாஷ் சந்திர போஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று மனு ஒன்றை வழங்கி உள்ளனர்.