சேலம்:தமிழ்நாட்டின் மின்சாரத் துறை முன்னாள்அமைச்சர் தங்கமணி, அவரது உறவினர்கள் வீடுகளில் இன்று (டிசம்பர் 15) காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் திடீர் சோதனை நடத்திவருகின்றனர்.
அதிமுக பிரமுகர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றுவருகிறது. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில் நெடுஞ்சாலை நகரில் சோதனை நடைபெறும் வீட்டின் முன்பு அதிமுக சேலம் தெற்கு எம்எல்ஏ பாலசுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் எம்எல்ஏக்கள், அதிமுகவினர் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென திரண்டு லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தும் சோதனைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.