கன்னட மொழியில் பேசி வாக்காளர்களைக் கவர்ந்த அதிமுக வேட்பாளர்! - Tamil Nadu Legislative Assembly Election
சேலத்தில் கன்னட மொழியில் பேசி வாக்காளர்களை அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன் கவர்ந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலானது வரும் ஏப்ரல் 6ஆம் தேதி வருவதால், சேலத்தில் உள்ள அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் விறுவிறுப்பாக பரப்புரையில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) காலை சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக பாலசுப்பிரமணியன் களமிறங்கி கொண்டலாம்பட்டி பகுதியில் உள்ள 51, 52 ஆகிய வார்டுகளில் வாக்குகளை சேகரித்தார்.
அந்தப் பகுதியில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். அனைவரும் நெசவு தொழில் செய்பவர்கள். இதனை அறிந்த வேட்பாளர் பாலசுப்பிரமணியன் உடனே கன்னட மொழியில் பேசி வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை சேகரித்தார். மேலும் தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன் என்றும் அவர் கன்னட மொழியில் வாக்குறுதி அளித்து பொதுமக்களை கவர்ந்தார்.