’’அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கிறது’’ - எடப்பாடி பழனிசாமி பேட்டி சேலம்: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக சேலத்திற்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு அக்கட்சியினர் பிரம்மாண்ட வரவேற்புக் கொடுத்தனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரின் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ’’பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் சேலத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். பாஜக மற்றும் அதிமுக கூட்டணி குறித்து முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ளவர்கள் தான். மாநிலத்தில் உள்ளவர்கள் அல்ல.
அதிமுக கூட்டணியில் பாஜக தொடர்வதாக நட்டா போன்ற டெல்லி தலைவர்களே கூறி விட்டனர். நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தல் வரும் என எதிர்பார்க்கிறோம். அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மீண்டும் தாய் கழகத்திலிருந்து இணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நைனார் நாகேந்திரன் மட்டுமல்ல. எல்லோருக்கும் இது பொருந்தும்.
ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சியில் இணைவது அவரவர் ஜனநாயக உரிமை. எம்.ஜி.ஆர் கட்சியை துவங்கும் போது பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார். அவரது மறைவருக்குப் பிறகு ஜெயலலிதா பல்வேறு சோதனைகளைச் சந்தித்தார். அதே போல் அவர்களைத் தொடர்ந்து பின்வரும் தலைவர்கள் சோதனைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் எம்பி பன்னீர்செல்வம் , எம்எல்ஏக்கள் ராஜமுத்து, சித்ரா , பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட சேலம் மாவட்ட அதிமுக பிரதிநிதிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "அதிமுகவில் இருந்து விலகியது வருத்தம்" புது ரூட்டில் பயணிக்கும் நயினார் நாகேந்திரன்.. அடுத்த திட்டம் என்ன?