சேலம்புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”திமுக ஆட்சி செய்த ஓராண்டு காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு அழிந்துவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் சொத்துகளை இழந்து இன்னுயிரையும் இழந்துவிட்டனர்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு நடிகர்கள் உள்பட பிரபலங்கள் யாரும் துணை போகக்கூடாது. அரசும் ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அதிகரித்து வருகிறது. அதனை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஏழை குழந்தைகளின் நலனுக்காக அதிமுக ஆட்சியில் அரசுப்பள்ளிகளில் கொண்டுவரப்பட்ட எல்கேஜி,யூகேஜி வகுப்புகள் ரத்து செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என்றார்.
மேலும் அதிமுக பொதுச்செயலாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், 'அந்தக்கேள்வி கற்பனையானது' என்று விமர்சித்தார். 'கந்துவட்டி மிகப்பெரிய கொடுமை; காவல் துறையைச் சேர்ந்த ஒருவரே அதனால் உயிரிழந்திருப்பதை சுட்டிக்காட்டிய அவர் அரசு கந்துவட்டியை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.