தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நடிகர் சிவாஜி நிலைமை தான் ரஜினி, கமலுக்கும்' - முதலமைச்சர் கருத்து! - Salam District News

சேலம்: நடிகர் ரஜினியும், கமலும் சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்தார்களே தவிர, மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றும், அவர்கள் அரசியலுக்கு வந்தாலும் ஒன்றும் செய்யப்போவதில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Nov 12, 2019, 6:16 PM IST

சேலம் மாவட்டம், ஓமலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அரசின் திட்டங்களுக்கு மக்களும், பத்திரிக்கை, ஊடகங்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் முதலமைச்சரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். பின்வருமாறு,

கேள்வி: சென்னையில் காற்றில் மாசு அதிகமாக இருப்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: ஏற்கெனவே வருவாய்த் துறை அமைச்சர் ஊடகத்தின் வாயிலாக இதுகுறித்து தகுந்த விளக்கத்தைக் கொடுத்திருக்கின்றார். எந்தெந்த வகையில் மாசு ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளார். 'புல்புல்' புயலினால் ஏற்பட்ட பருவ நிலை மாற்றம் காரணமாக, இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது நாம் இருக்கக்கூடிய இந்த இடத்தில் மாசு ஏதும் தென்படவில்லையே!

கேள்வி: பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவது போல், காலை உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதும் உள்ளதா?

பதில்: தற்போது வரை அப்படிப்பட்ட திட்டம் ஏதும் அரசிடமில்லை. நிதிநிலை திருப்தியடைந்தவுடன் இது குறித்து அரசு பரிசீலிக்கும்.

கேள்வி: கால்நடைப் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகின்றாரா?

பதில்: கால்நடைப் பூங்கா அமைப்பது மிகப்பெரிய திட்டம். அது தொடர்பாக பல்வேறு பணிகள் இருக்கிறது. இதற்கு முதற்கட்டமாக ரூபாய் 396 கோடி ஒதுக்குகின்றோம். பின்னர் படிப்படியாக விரிவுபடுத்த இருக்கிறோம். ஏறக்குறைய ரூ.1,000 கோடி அளவில் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அரசு திட்டமிட்டிருக்கின்றது. இது ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவாக அமையவிருப்பதால், அதில் கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். மேலும், இதில் பல்வேறு வகையான திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தற்பொழுது முதற்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தப் பணிகள் விரைவாக முடிந்து, கால்நடைப் பூங்கா ஏற்படுத்தப்படும்போது தகவல் தெரிவிக்கப்படும்.

கேள்வி: நெடுஞ்சாலைத் துறைக்கு வழங்கிய ரூ.5,000 கோடியை மத்திய அரசு திரும்பப் பெற்றதாக, மறுபடியும் ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறதே?

பதில்: நீங்கள் தான் எல்லா ஊடகத்திலும் மாற்றி மாற்றி காட்டினீர்களே? சேலத்திலிருந்து சென்னைக்கு செல்வதற்கு 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக அமைப்பதற்கு நிலம் எடுத்தோம். நிலம் கொடுக்கக்கூடாது என்று சொன்னீர்கள். இது எல்லா இடங்களிலும் தொற்றுநோய் போலப் பரவி, தற்போது தமிழ்நாட்டில் எங்கேயும் நிலம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மின்கோபுரம் கொண்டு போவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். சாலை விரிவுபடுத்துவதற்கும் நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அரசாங்கம் என்ன செய்ய முடியும்? பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்களும் தயவு செய்து அரசுக்குத் துணை நிற்க வேண்டும்.

விலை மதிக்க முடியாத உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காகத் தான், நாங்கள் சாலைகளை விரிவுபடுத்துகிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் நாம் நிலத்தைக் கையகப்படுத்தி மத்திய அரசுக்கு கொடுத்தால்தான் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியும்.

ஆனால், நிலத்தை கையகப்படுத்தும்பொழுது பலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகிறார்கள். சிலர் போராட்டங்களை நடத்துகிறார்கள். இதற்கு சில அரசியல் கட்சிகள் துணை நிற்கின்றன. ஏன் ஊடகமே துணை நிற்கிறது. பல்வேறு விமர்சனங்களை வைக்கிறீர்கள், எப்படி நாங்கள் விரிவாக்கம் செய்ய முடியும்? பத்திரிகையாளர்களும், ஊடக நண்பர்களும் அரசுக்குப் பக்கபலமாக இருந்தால்தான் அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்ற முடியும்.

பொதுமக்களும் ஒத்துழைப்பை கொடுத்தால் தான் அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியும். அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் தான், சாலை விரிவாக்கப் பணியும் நடைபெறும். அதேபோல, மின்கோபுரமும் கொண்டுவர முடியும். தடையில்லா மின்சாரம் வேண்டும் என்கிறோம். நாளுக்கு நாள் மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதினால், அதற்கேற்றவாறு, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், மின்பாதை அமைக்க வேண்டும். அப்பொழுதுதான் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்க இயலும். இதையெல்லாம் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று அன்போடு கோரிக்கை வைக்கிறேன்.

கேள்வி: அனைத்துக்கும் மக்கள் வீதிக்கு வந்துதான் போராட வேண்டியிருக்கிறது?

பதில்: மறுபடியும் நீங்கள் திருப்பிக் கேட்கிறீர்கள். அரசாங்கம் எல்லா முயற்சியும் எடுக்கிறது. இன்னும் 10 வருடம் கழித்து என்ன நடக்குமென்று திட்டமிட்டு நாங்கள் செயல்படுத்துகிறோம். 8 வழிச்சாலை முழுவதுமாக நிறைவேற்றுவதற்கு சுமார் ஐந்தாண்டுகள் காலம் ஆகும். இப்படி எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லையென்றால், அரசாங்கத்தால் எப்படி திட்டங்களைச் செயல்படுத்த முடியும்?

கேள்வி: ரஜினியைப் போன்றே கமலும் அண்ணா தி.மு.க., தி.மு.க.வைப் பற்றி விமர்சனம் செய்துள்ளாரே?

பதில்: வெற்றிடம் என்று சொன்னார். ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் போட்டியிடவில்லை. கமல் மிகப்பெரிய தலைவர் தானே? நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு ஓட்டுக்களைப் பெற்றார்? இவையெல்லாம், வேண்டுமென்றே திட்டமிட்டு, தனக்கு வயதாகிவிட்டது. 65, 66 வயது ஆகிவிட்ட காரணத்தினால், திரைப்படத் துறையில் தகுந்த வாய்ப்பில்லாத காரணத்தினால் கட்சி ஆரம்பிக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களை குறை சொல்லிப் பேசுவது தவறாக உள்ளது. இத்தனை காலமாக அவர் எங்கிருந்தார். எடுத்தவுடன் நான் இந்த நிலைக்கு வரவில்லை. ஏறக்குறைய 45 ஆண்டுகள் காலம் கட்சியில் பணியாற்றி இருக்கின்றேன்.

மக்களுக்காக பல்வேறுப் போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கின்றோம். பல்வேறு பணிகளை மக்களுக்குச் செய்து இப்போது ஆதரவைப் பெற்று இன்றைக்கு இந்த நிலைக்கு உயர்ந்திருக்கிறோம். அவர்கள் மக்களுக்கு என்னப் பணி செய்தார்கள்? திரைப்படங்களில் நடித்தார்கள், வருமானத்தை ஈட்டிக் கொண்டார்கள். இன்று வரை திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இன்று வரை வருமானத்தை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்கள், மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களைவிட, மிகப்பெரிய நடிகர் - சிவாஜி கணேசனே தேர்தலைச் சந்தித்து அவருக்கு எப்படிப்பட்ட நிலை ஏற்பட்டதென்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். அவரைவிடவும் மிகச்சிறந்த நடிகர் இல்லை.

புரட்சித் தலைவருக்கு அடுத்த நிலையில் நடிகர் திலகம் இருந்தார். அவரெல்லாம் கட்சித் தொடங்கி ஏற்பட்ட நிலைமை தான் இவருக்கும் ஏற்படும். வயது முதிர்ந்த காரணத்தினாலேயே, கமல்ஹாசன் அவராகவே இப்படி ஒரு முன்னேற்பாட்டை செய்து கொண்டார். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் திரைப்படத்தைப் பார்த்தால்கூட போதுமென்ற நிலைக்கு வந்துவிட்டார் என்று கருதுகின்றேன். அந்த நிலைக்குச் சென்று விட்டார். அதனால் தான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா? அந்தப் பகுதி மக்களின் பிரச்னை தெரியுமா? என்ன அடிப்படை தெரியும்? அடிப்படை தெரியாமலேயே தலைவர் போன்று உருவாக்கிக் கொண்டார்கள். திரைப்படங்களில் நடித்தார்கள், மக்களின் பணத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அந்தப் பணத்தின் வாயிலாக இன்றைக்கு அரசியலில் பிரவேசிக்கின்றார்கள்.

கேள்வி: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தாலும் இதுபோல் தான் வருவாரா?

பதில்: யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது. முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும். பின்னர் அதற்குண்டான பதில் தரப்படும்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

கேள்வி: கோவையில் அதிமுக பேனர் விழுந்து இருவர் காயமடைந்துள்ளனரே?

பதில்: கோவையில் அதிமுக கொடிக் கம்பம் விழுந்து இருவர் காயம் ஆன விவகாரம் இதுவரை எனது கவனத்திற்கு வரவில்லை. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் சின்னசேலம் பகுதியில் ஹெல்மெட் சோதனையின் போது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்’ என்றார்.

இதையும் படிங்க’இணைவதற்கு கடிதம் கொடுத்தால் தலைமை பரிசீலிக்கும்’ - புகழேந்திக்கு எடப்பாடி சிக்னல்!:

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details