சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்ட அளவிலான வணிகவரித் துறை அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி வணிகர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். செய்தியாளர்களிடம் பேசிய அவர்," தமிழ்நாடு முழுவதும் வணிகவரி ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
வணிகர்களிடம் தொழில் செய்வதில் இடையூறு ஏற்படுவது குறித்தும் ஜிஎஸ்டி வரி பிரச்னை குறித்தும் கேட்டறியப்பட்டது. அடுத்த வாரம் முழுமையாக ஆய்வை முடித்துவிட்டு தேவையானவற்றை முதலமைச்சரிடம் எடுத்துக் கூறி அனுமதி பெற்று ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவிக்க இருக்கிறோம்.
கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மாற்றங்களை எங்களது ஆட்சி செயல்படுத்தியுள்ளது. கடந்த கால ஆட்சியில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துள்ளனர்.
அதையெல்லாம் சமாளித்து முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறார். வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையில் ஒரே இடத்தில் 10 ஆண்டுகாலம் தொடர்ந்து மாவட்டங்களில் பணியாற்றியவர்களை கவுன்சிலிங் முறையில் மாற்றம் செய்யலாமா என்றும் பணியிட மாற்றம் செய்யலாமா என்றும் ஆலோசித்துவருகிறோம்.