சேலம் : கடந்த 15 நாள்களுக்கு முன்பு தனியார் நட்சத்திர உணவகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மோப்ப நாய் உதவியுடன் காவல் துறையினர் உணவகம் முழுவதும் சோதனை நடத்தினர். இதுதொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். ஆனால் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
விசாரணையில் உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்,இலவச வைஃபை வசதியைப் பயன்படுத்தி, அங்கு ஏற்கனவே தங்கியிருந்த நபர் வெடிகுண்டு மிரட்டலை, உணவக நிர்வாகத்திற்கு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் சேலம் அடுத்த மாமாங்கத்தில் உள்ள இன்னொரு தனியார் நட்சத்திர உணவகத்துக்கு இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் தெரியவந்தது.
வெடிகுண்டு மிரட்டல்
விசாரணையில் ஒரே நபர் இரண்டு நட்சத்திர உணவகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.இந்நிலையில் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியருக்கு செல்போன் எண் மூலமாக பேசிய மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதேபோன்று கேரள மாநிலத்தின் தலைமைச் செயலக அலுவலர்கள், அங்கு உள்ள ரயில்வே நிலைய மேலாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து கேரள மாநில காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மிரட்டல் விடுக்கப் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண், சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள சித்தனூரில் பழைய பேப்பர் கடை வைத்திருக்கும் கிருஷ்ணன் என்பவர் எண் என்று கண்டுபிடித்தனர். அதனைத் தொடர்ந்து சேலம் காவல் துறையினரை தொடர்பு கொண்ட கேரளா காவல் துறையினர் கிருஷ்ணனிடம் விசாரணை நடத்த கோரினர்.