சேலம் திருமலைகிரி அருகே உள்ள மல்லபுரத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (75). இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் முத்துவுடன் வசித்துவந்தார்.
தினமும் பழனியம்மாள் வீட்டருகே உள்ள நியாயவிலைக் கடையின் அருகே அமர்ந்திருப்பது வழக்கம். இதுபோல் நேற்று பழனியம்மாள் நியாயவிலைக் கடையின் அருகே சென்று அமர்ந்திருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்றில் சிறுவன் ஒருவன் வந்து பழனியம்மாளிடம் பேச்சு கொடுப்பதுபோல் பேசி, அவரிடமிருந்த தோடு, மூக்குத்தியைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால், மூதாட்டி நகைகளைக் கொடுக்க மறுத்து சிறுவனை விரட்டினார்.
இதில் ஆத்திரமடைந்த அச்சிறுவன் தன் சட்டைப்பையில் மறைத்துவைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தை அறுத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். பின்னர் மூதாட்டியை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டனர். ஆனால், மூதாட்டி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் இந்தக் கொலை குறித்து இரும்பாலை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட உடனே விரைந்துவந்த காவல் துறையினர் மூதாட்டியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுசெய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதையடுத்து மூதாட்டி அமர்ந்திருந்த இடம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். அதில் மூதாட்டியைக் கொலைசெய்த சிறுவன் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்ததை வைத்து சிறுவனைக் காவல் துறையினர் தேடிவந்தனர்.
மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை இந்நிலையில், இன்று இரும்பாலை அருகே இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற அந்த இளைஞர் சிக்கினார். விசாரணையில் அவர் சேலம் அருகே உள்ள வேடுகாத்தாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து பாலாஜி, கத்தி வாங்கி கொடுத்த நண்பன் ஜீவா ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை; சிக்கியது சிறுவனின் சிசிடிவி காட்சி