மேட்டூர் ரயில் நிலையத்திலிருந்து சேலம் சந்திப்பு வரை இரண்டாவது இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த இருப்பு பாதையின் இருபுறமும் குடியிருப்புகள் உள்ள பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த பழைய சுற்றுச்சுவருக்கு அருகே புதிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.26) மாலை புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்காக, ஜே.சி.பி இயந்திரம் மூலம் பழைய சுற்றுச்சுவர் அருகே குழிதோண்டும் பணிகளை தொழிலாளர்கள் செய்து வந்தனர். இப்பணியில் 13 கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சுமார் 40 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் அப்படியே இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதில் நான்கு பெண் தொழிலாளர்கள் உள்பட 6 பேர் இடிபாடுகளிடையே சிக்கி உயிருக்குப் போராடினர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் அரை மணி நேரத்தில் இடிபாடுகளிடையே சிக்கியவர்களை மீட்டனர்.