சேலம்: நடப்புநிதியாண்டின் முதல் அரையாண்டில், பயணச்சீட்டு சோதனையில் ரூ.7.30 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் ரயில்வே கோட்டத்தில், டிக்கெட் பரிசோதகர்கள் மூலம் ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்து, முறைகேட்டில் ஈடுபடுபவர்களை தடுக்கும் வகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதில், சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் 67,996 வழக்குகள் பதிவு செய்து, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக ரூ.5.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் சாதாரண வகுப்பு எடுத்து, முன்பதிவு பெட்டியில் முறைகேடாகப் பயணம் செய்ததாக 40,669 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முறையாகப் பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்துச் சென்றதாக 205 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.21 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், கடந்த மாதத்தில் ரூ.1.54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்ததாக, 13,216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.02 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
முறைகேடாக பயணம் செய்ததாக 9,910 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.51.68 லட்சம் அபராதமும், முறையாக பதிவு செய்யாமல் சரக்கு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றதாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.24,183 அபராதமும் வசூலிக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்தில், நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, முதல் அரையாண்டில் 22,836 முறை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் மொத்தம் ரூ.7.30 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:திருச்சி ரயில்வேயில் டிடிஆர் பணி.. ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம்.. யார் இந்த ராஜேஷ் ரமேஷ்?