சேலம் அடுத்த கோரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பார்வதி (60). இவர் தனது நிலத்தில் ' நர்சரி கார்டன்' வைத்து பூ, பழச்செடிகள் வளர்த்து விற்பனை செய்து வருகிறார். பார்வதியின் மகன், மகள்கள் வெளியூரில் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த நிலையில், பார்வதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு நர்சரிக்கு வந்த ஒரு பெண், தன் மகள் கருவுற்றுள்ளதால் மாங்காய் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, பார்வதி நர்சரி உள்ளே சென்று செடியிலிருந்து மாங்காய் பறித்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, மாங்காய் கேட்ட பெண் இல்லாததைக் கண்டு சந்தேகமடைந்தார். உடனடியாக பார்வதி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோ திறந்திருந்த நிலையில், பீரோவில் வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து பார்வதி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் ஆய்வாளர் நித்யா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர். இதையடுத்து, சேலத்தில் நகை பறிப்பு, வீடுகளில் திருடும் பெண்களின் புகைப்படங்களை கொண்டு வந்து பார்வதியிடம் காவலர்கள் காண்பித்தனர்.
அதில் மைதிலி (40) என்ற பெண்ணை அடையாளம் காட்டி, இவர்தான் என் வீட்டிற்கு வந்தார் என பார்வதி தெரிவித்துள்ளார். இதையடுத்து தனிப்படை காவல் துறையினர் கன்னங்குறிச்சி பகுதியில் தங்கியிருந்த மைதிலியை நேற்று (பிப்.17) கைது செய்து 25 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, மைதிலியை, சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மகளிர் கிளை சிறையில் அடைத்தனர். இதில் மைதிலி மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதும், இவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதிமுக கறி விருந்து: மூதாட்டி காதை அறுத்து நகை திருட்டு