தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலத்தில் அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்! - salem news in tamil

Woman Died In Salem GH: சேலம் அரசு மருத்துவமனையில் பிரசவ அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தாய் உயிரிழந்ததால் அவரின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Woman Died In Salem GH
சேலத்தில் பிரசவ அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழப்பு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 3, 2024, 5:18 PM IST

சேலம்: சேலம் மாவட்டம் இரும்பாலை அடுத்த திருமலைகிரியைச் சேர்ந்தவர் சூர்யா. இவர் வெள்ளி பட்டறை கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவி மணிமேகலைக்கு, (25) கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அன்றைய தினமே சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறுநாள் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த மணிமேகலை, நேற்று (ஜன.02) மாலை திடீரென்று உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர், இன்று (ஜன.03) மருத்துவமனை முன்பு அமர்ந்து மருத்துவர்களைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது குறித்து உறவினர்கள் கூறும்போது, "அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களும், செவிலியர்களும் அலட்சியம் காட்டுகின்றனர். இதன் காரணமாகத்தான் இது போன்று தாய்மார்கள் உயிரிழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சை மூலம் மணிமேகலைக்கு பிரசவம் செய்யப்பட்டது. அதில் அவருக்கு அதிக உதிரப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய, மருத்துவர்கள் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கத் தவறிவிட்டனர். பயிற்சி மருத்துவர்களை வைத்து, மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற அறுவை சிகிச்சை மருத்துவம் செய்து, அப்பாவி பெண்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.

இதில் உடனடியாக சுகாதாரத்துறை தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழைகள் நம்பி உள்ள அரசு மருத்துவமனையைப் பாதுகாக்க வேண்டும். சேலம் அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக இருந்தாலும், போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.

போதுமான மருந்துகள் இல்லாததால், வெளியில் இருந்து மருந்துகளை வாங்கி வர இங்குள்ள மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர். இது போன்ற பிரச்சினைகளைக் களைவதற்கு அரசு தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த மணிமேகலையின் உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால், அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சேலம் டவுன் போலீசார், உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க:திண்டுக்கல்லில் நர்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தாளாளருக்கு 7ஆண்டு சிறைத் தண்டனை..!

ABOUT THE AUTHOR

...view details