சேலம்: தமிழகம் முழுவதும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு பருப்பு மற்றும் பாமாயில், ஐந்து நிறுவனங்கள் மூலமாக கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் சந்தீப் என்பவருக்கு சொந்தமான பருப்பு குடோன் சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மேட்டுவேளாளர் தெருவில் அமைந்துள்ளது. இங்கு வருமானவரித்துறை சென்னை ஆய்வாளர் வம்சி கிருஷ்ணா, தர்மபுரி வருமானவரித்துறை அதிகாரி நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஐந்துபேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் சோதனை நடத்த வந்துள்ளனர்.
அப்போது அங்கு பணியாற்றி வந்த ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு 9 மணி அளவில் சேலம் மாநகரகாவல் துறை பாதுகாப்புடன் உடன் சீல் வைக்கப்பட்ட பருப்பு குடோனை திறந்து ஐந்து பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர்.