சேலம் அம்மாபேட்டை அடுத்த மஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் 8 வயது சிறுவன். இச்சிறுவன், சில நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அப்பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், ஐந்து மருந்துகள் கலந்த ஊசியை சிறுவனுக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னரும் காய்ச்சல் குறையாத நிலையில் சிறுவன் அம்மாபேட்டை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கும் அவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் குணமடையவில்லை. இதனையடுத்து சிறுவன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அங்கு சிறுவனுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுவன் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் நவ. 5 ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.