முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக குறிப்பிட்டு எழுதிய ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் சேலத்தில் இன்று நேரில் அளித்திருந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவின் அடிப்படை தொண்டராக செயல்பட விரும்புகிறேன். தனது ராஜினாமா குறித்து முதலமைச்சர் இறுதி முடிவை அறிவிப்பார்" என தெரிவித்தார்.
'கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றுங்கள்'- தோப்பு வெங்கடாசலத்திற்கு முதலமைச்சர் வேண்டுகோள்! - முதலமைச்சர் பழனிசாமி
சேலம்: கழகப் பணியை தொடர்ந்து ஆற்ற வேண்டும் என்றும் இதுதான் தன்னுடைய மற்றும் பன்னீர்செல்வத்தின் விருப்பம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தோப்பு வெங்கடாசலமிடம் கூறியதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டியிருந்த முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், " முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இன்று மாலை எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்திருந்தார். அப்போது அவரிடம் கழகப் பணியை தொடர்ந்து ஆற்றுங்கள். பல்வேறு வாய்ப்புகள் உங்களை தேடி வருகிறது. கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதுதான் தன்னுடைய மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் விருப்பம் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அவரிடம் தெரிவித்தார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " நாளை டெல்லியில் நடைபெற உள்ள பாஜகவின் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலந்து கொள்கின்றனர். அதற்காக துணை முதலமைச்சர் இன்று இரவு டெல்லி செல்கிறார். நாளை காலை முதலமைச்சர் டெல்லி செல்கிறார் .வட மாநிலத்தை பொறுத்தவரை பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை இப்போது வெளிவரும் கருத்துக் கணிப்பு செய்திகள் எல்லாம் கருத்துக்கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு" என்று தெரிவித்தார்.