சேலம் :சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு சேலம் மாவட்டம் மட்டும் அல்லாது நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள், பல்வேறு சிகிச்சைக்காக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மகப்பேறு மருத்துவ சேவை வழங்கவும் தனி கட்டடம் உள்ளது.
இந்தக் கட்டடத்தில் 4 தளங்கள் உள்ளன. பிரத்தியேக நவீனமருத்துவ வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அறையும் உள்ளது. ஒரே நேரத்தில் 15 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவம் பார்க்கும் வகையில் வசதிகள் இருப்பதால் இங்கு கர்ப்பிணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள வார்டுகளில் சராசரியாக நாள்தோறும் 20 மகப்பேறு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் 8 ஆயிரத்து 653 கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு நடந்ததுள்ளது. அதிலும் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,194 பிரசவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சேலம் அரசு மருத்துவமனை வரலாற்றில் ஒரு புதிய சாதனை என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தலைமை மகப்பேறு மருத்துவர் சுபா பெரியசாமி கூறுகையில்,"கரோனா காலத்தில் மேல்தட்டு, அடித்தட்டு என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் அரசு மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணிகள் நிறைய பேர் வசதி படைத்த குடும்பத்தில் இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற இயலாத நிலை இருப்பதால், அரசு மருத்துவமனைகளை நாடி சிறப்பான சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவர்களுக்கு மகப்பேறு அரசு மருத்துவமனைகளிலேயே நடைபெறுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு சேலம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அதிகமாக நடைபெற்று இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,194 பிரசவங்கள் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. இங்கு 60 சதவீத பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலமாக நடைபெற்றுள்ளது. சுக பிரசவங்களும் நடந்துள்ளன.
குறிப்பாக கரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பிணிகளுக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் மகப்பேறு நடப்பதில்லை. அந்த மருத்துவமனைகளில் இருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு கர்ப்பிணியை அனுப்பி வைக்கின்றனர். அங்கு அவர்கள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிறப்பு கவனம் அளித்து, முழுமையான சிகிச்சை அளிக்கப்பட்டு தாய் சேய் இருவரையும் நலமாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறோம்.
அந்த வகையில் ஒரு கட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கரோனா தொற்று பாதித்த நிலையில், அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பெற்றுக் கொண்டு குழந்தையுடன் ஆரோக்கியமாக வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர்.
பெரிய வசதி படைத்த குடும்பத்திலிருந்து வரும் கர்ப்பிணிகளும் அரசு மருத்துவமனையின் நிலை அறிந்து, உணர்ந்து இங்கு பிரசவம் பார்த்துச் செல்கின்றனர். அவர்களுக்காக அரசு மருத்துவர்கள் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்து மகப்பேறு பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து பாராட்டி செல்கின்றனர். 5 மாதம் முதல் 9 மாதம் வரையிலான கர்ப்பிணிகள் தற்போது அரசு மருத்துவமனையை அதிகம் நாடி வந்து பரிசோதனை செய்து கொள்கின்றனர் மகப்பேறும் அவர்களுக்கு இங்கேயே நடக்கிறது. அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மட்டுமல்லாது ஈரோடு போன்ற பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் கரோனா பாசிட்டிவ் வந்த கர்ப்பிணிகள் இங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து குணமடையச் செய்து வீட்டிற்கு அனுப்புகிறோம். அதே பேல கடைசி நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை அளிக்க முடியாது என்று கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கின்றனர். அப்படி சிக்கலான நிலையில் வருபவர்களையும் குணப்படுத்தி மகப்பேறு பார்த்து நலமடைய செய்கிறோம்.
கரோனா காலத்தில் கர்ப்பிணிகள் முகக் கவசம் அணிவதைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தங்களை வீட்டிற்கே வந்து உறவினர்கள் பார்க்க வரும் போதும் கூட முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும்.
வெளியில் சென்று வந்தால் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்லக்கூடாது. வளைகாப்பு நிகழ்ச்சியை பெரிய கூட்டம் கூட்டி நடத்திட கூடாது. தகுந்த இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் இப்படி இருந்தாலே கரோனா தொற்றிலிருந்து கர்ப்பிணிகள் தப்பிக்கலாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தொடர் விடுமுறை: உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய காரணம் என்ன?