மருத்துவம் பயில நீட் தேர்வு தான் நுழைவுத் தேர்வு. இதில் 635 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற்றிருக்கிறார், சுஜித்குமார். இவர் சேலம் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தின் அருகே மரத்துக்குட்டை பகுதியை சேர்ந்த சேட்டு, லலிதா தம்பதியின் மகன். சுஜித்குமாருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.
அரசு பள்ளியில் பயின்ற சுஜித்குமார் படிப்பில் படுசுட்டி. அதனால் எட்டாம் வகுப்பிலேயே அப்பள்ளி ஆசிரியர் சுஜித்தின் மேல்படிப்பிற்கு உதவியுள்ளனர். தாரமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்களின் உதவியுடன் 12ஆம் வகுப்பு வரை படித்த சுஜித் வாரம் ஒருமுறை தனியார் பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி பெற்றார்.
அப்போது அவருக்கு கிடைத்த மதிப்பெண்கள் 327 மட்டும்தான். நார் தயாரிக்கும் ஆலை, செங்கல் சூளையில் வேலை செய்யும் தனது பெற்றோருக்கு மேலும் கஷ்டம் கொடுக்காமல் தானும் வேலைக்கு செல்லத் தயாராக வேண்டிய நிலை சுஜித்குமாருக்கு ஏற்பட்டது. தனது தந்தை அளித்த ஊக்கத்தோடு மீண்டும் தன் கனவை நோக்கி உழைத்தார். வேலை செய்துகொண்டே மீண்டும் நீட் தேர்விற்கு படிக்கத் தொடங்கினார்.
பெற்றோர் அளித்த சிறிய தொகையைக் கொண்டு ஒரு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 20 மணி நேரம் அயராது உழைத்திருக்கிறார். ஒரு ஆண்டு கடின உழைப்புக்கு பின்னர் இந்தாண்டு மீண்டும் நீட் தேர்விற்கு முயற்சித்த சுஜித்குமாருக்கு இம்முறை காத்திருந்தாதோ வெற்றி எனும் தளிர். தன் முயற்சிக்கு நம்பிக்கை எனும் நீர் ஊற்றிய பெற்றோருக்கு சுஜித் அளித்த விலைமதிக்கமுடியா பரிசு 635 மதிப்பெண்கள்.