ஸ்ரீவாரி பிரம்மோற்சவம் விழா சேலம்:ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில், திருமலை திருப்பதியில் நடைபெறும் ஸ்ரீவாரி பிரம்மோற்சவ விழாவிற்கு ஆண்டுதோறும் மலர்களை கொடுத்து அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா திருமலை திருப்பதி கோயிலில் விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வரும் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ள விழாவிற்காக, வாசனை மிகுந்த மலர்கள் மாலையாக தொடுக்கும் நிகழ்ச்சி, சேலம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று (செப்.20) நடைபெற்றது. ஸ்ரீ பக்தி சாரர் பக்த சபா சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் காலை முதல் ஆர்வத்துடன் மலர்களை மாலையாக தொடுத்தனர். கூடி இருந்த பெண்கள் அனைவரும் மாலை தொடுக்கும் போது திருநாமங்களை சொல்லிக் கொண்டே மாலைகளை தொடுத்தனர்.
அதில் சம்பங்கி, சாமந்தி, அரளி, கோழிகொண்டை, துளசி உள்ளிட்ட பல்வேறு மலர்களைக் கொண்டு மாலைகள் கட்டப்பட்டது. அவ்வாறு கட்டப்பட்ட மாலைகள் இன்று மாலை திருமலை திருப்பதி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர தென்னை, வாழை, பாக்கு குழைகள் போன்ற பந்தல் அலங்காரப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகிறது.
இது குறித்து மலர்களை தொடுக்கும் பெண்கள் கூறுகையில், "திருப்பதிக்குச் சென்று வெங்கடாஜலபதியை வழிபட முடியாத சூழ்நிலையில் நாங்கள் தொடுக்கும் மலர்கள் திருமலை திருப்பதிக்கு அலங்காரமான செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதனால்தான் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் விழாவுக்காக சேலத்தில் இருந்து டன் கணக்கில் மலர்களை மாலையாக தொடுத்து அனுப்பி வைக்கிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: விண்ணிலிருந்து இறங்கிய தங்கக்கிண்ணம்.. ராமோஜி பிலிம் சிட்டிக்கு வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் டிராபி..