சேலம்:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், நிர்வாகத்தினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சேலம் மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "சேலம் இரும்பாலை வளாகத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் கொண்ட தற்காலிக கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒரு வார காலத்திற்குள் இந்த மையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
தமிழ்நாட்டில் தொற்று பரவலைத் தடுக்க முதலமைச்சர் தீவிர முயற்சி மேற்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார். சேலம் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நோயாளிகளின் தேவைக்கு ஏற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
'சேலம் இரும்பாலையில் 500 ஆக்ஸிஜன் படுக்கைகள் ஒரு வாரத்தில் பயன்பாட்டிற்கு வரும்' - அமைச்சர் உறுதி இது தொடர்பாக முதலமைச்சரிடம் விரிவாக தெரிவித்து கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேலத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாவட்டத்திற்கு 100 ஆக்ஸிஜன் சிலிண்டர் செறிவூட்டல் கேட்கப்பட்டு உள்ளது. இதில், 20 வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள செறிவூட்டல், ஆக்ஸிஜன் கருவிகளும் வழங்கப்படும். கரூரில் தற்போது ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட இரண்டு பேருந்துகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இதில், ஒன்று கரூருக்கும் இன்னொன்று சேலத்திற்கும் பயன்படுத்தப்பட உள்ளது. அந்தப் பேருந்தில் 3 படுக்கை வசதிகள், 8 இருக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "13 பேர் கொண்ட அனைத்துக் கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் குழுவில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளார். அவரும் சட்டப்பேரவை உறுப்பினர் தான். இதில் அரசியல் கட்சிப் பாகுபாடு இல்லை. அனைவரது ஆலோசனைகளையும் கருத்துகளையும் கேட்டு பரிசீலித்த பின்னர் முதலமைச்சர் முடிவெடுப்பார். இதுபோன்ற குழு இதற்கு முன்னர் அமைக்கப்படவில்லை. தற்போதுதான் முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், சேலம் ஒப்பந்த செவிலியர் உயிரிழந்தது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்து பேசி நல்ல முடிவை அறிவிப்போம் என்றார்.
இதையும் படிங்க:சேலம் இரும்பாலை வளாகத்தில் பிரம்மாண்ட கரோனா சிகிச்சை மையம்!