தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"டாஸ்மாக் கடைகளில் 40% போலி மது தான்"- கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு

டாஸ்மாக் கடைகளில் 40 சதவீதம் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

BJP protest
பாஜக ஆர்ப்பாட்டம்

By

Published : May 20, 2023, 6:02 PM IST

பாஜக ஆர்ப்பாட்டம்

சேலம்:விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஷச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மது ஒழிப்புக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல் முறை. மதுவிலக்கு அமல்படுத்தியிருந்த கால கட்டத்தில் கூட இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் தற்போது சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இரவு நேரங்களில் கட்டுப்பட்டை மீறி மது விற்பனை நடைபெறுகிறது. மதுக்கடைகள் மூடிய பிறகும் விடிய விடிய மது விற்பனை சர்வ சாதாரணமாக நடக்கிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் சந்துக்கடை என்ற பெயரில், திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மது விற்பனை செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் இவ்வளவு கள்ளச்சாராயம் எப்படி பெருகி உள்ளது என்ற கேள்வி அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் கடைகளில் விற்பதே போலி மது தான். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியானவை. வருமானத்தை குறைப்பதற்காக வரியை ஏய்ப்பதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் 40 சதவீத மது பாட்டில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராமல் வெளிப்பகுதிகளில் இருந்து வருகின்றன. அதனை பார்கள் மூலமாகவும், விற்பனை செய்து வருகிறார்கள்.

அரசாங்கமே போலி மதுவை கொடுக்கும் போது நாம் ஏன் நல்ல சாராயத்தை குடிக்க கூடாது என்று தான், சிலர் இன்றைக்கு விலை குறைவான சாராயத்தை வாங்கி குடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். இந்த நிலை தொடரக்கூடாது. முற்றுப்புள்ளி உடனடியாக வைக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை மட்டும் தடுக்க கூடாது. அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் போலி மதுவையும் தடுத்திட வேண்டும். சாராயத்தை மட்டுமே நம்பி செயல்படும் இந்த அரசாங்கம் மிக விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்.

இதுதான் திராவிட மாடல் உரிமை. இதில் மத்திய அரசு தலையிடுவதற்கு வாய்ப்பில்லை. இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்ற போது மட்டும் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்திற்கும், அடாவடிக்கும், அராஜகத்திற்கும் ஊழலுக்கும் நாங்கள் எப்படி பங்கு பெற முடியும்?

இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் ஊழல் அரசாங்கம். சாராயத்தை திருடி தன்னுடைய குடும்பத்தை வளர்த்துக் கொள்கின்ற அரசாங்கம். சாராயத்தில் ஏழை எளிய மக்களை கொன்று விட்டு அதில் கிடைக்கும் 30 சதவீத கமிஷன் தொகையை வைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்தும் அரசு இந்த அரசு. முதலமைச்சரின் குடும்பத்திற்கு இவ்வளவு பணமும் செல்கிறது. சாராயத்தில் வரும் வருமானத்தை வைத்து வாழ்கின்ற குடும்பம் எத்தனை நாட்களுக்கு உருப்படி ஆகும்?" என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் வாங்க தடையா? அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details