சேலம் மாநகராட்சிக்குட்பட்ட தாதுபாய்குட்டை காந்தி பஜார் பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாக கடைகளில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆட்சியர் ராமனிடம் மனு அளித்திருந்தனர். இதனையடுத்து, புகாரின் அடிப்படையில் தகுந்த சோதனை நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
சேலத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் - மூன்று சிறுவர்கள் மீட்பு!
சேலம்: ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
ஆட்சியரின் உத்தரவின் பேரில், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் நிர்மலா, தொழிலாளர் நல உதவி ஆணையர் கோட்டீஸ்வரி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள், சைல்டு லைன் நிர்வாகிகள் மற்றும் காவல்துறையினர் தாதுபாய்குட்டை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். இதில், 13 வயது நிரம்பிய சிறுவன் மீட்கப்பட்டார்.
அதேபோல் சேலம் அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிந்த இரண்டு சிறுவர்களையும் குழந்தை தொழிலாளர் நல அலுவலர்கள் மீட்டனர். மேலும் குழந்தை தொழிலாளர்களை யாரும் பணியில் அமர்த்தக் கூடாது என்றும், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மீட்கப்பட்ட சிறுவர்கள் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.