வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு காய்கறி வேன் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததைக் கண்ட காவல் துறையினர், வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது வேனில் இருந்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த காவல் துறையினர், காய்கறி வேனை சோதனை செய்தபோது அதில் தமிழநாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காய்கறி வேனில் கடத்தி வரப்பட்ட சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 220 கிலோ குட்கா பொருள்களையும், வேனையம் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர், கடத்தலில் ஈடுபட்ட வேலூர் சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஜாபர்கான், ஆசிப், அஜ்மல் கான், அகமதுல்லா, ஆகிய நான்கு பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், 220 கிலோ குட்கா பொருள்கள் பெங்களூரூவில் இருந்து கடத்தி வரப்பட்டது என்றும், காவல் துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்காக காய்கறி லோடு ஏற்றி அதில் வேனில் அடிப்பகுதியில் குட்காவும், மேல் பகுதியில் காய்கறிகளையும் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும், 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், காய்கறி ஏற்றி வந்த வேனில் இருந்த 10 மூட்டை காலிபிளவர், வேலூர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.