தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

200வது முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன் பத்மராஜன்!

சேலம்: சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், குடியரசுத்தலைவர் தேர்தல் என பல்வேறு வகையான தேர்தல்களிலும் வேட்புமனு தாக்கல் செய்து வருபவர் தேர்தல் மன்னன் பத்மராஜன். இவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதன் மூலம் புது சாதனையை படைக்க உள்ளார். ஆம்... இந்த வேட்புமனுதாக்கல் அவருக்கு 200வது வேட்புமனு தாக்கல் ஆகும்.

தேர்தல் மன்னன் பத்மராஜன்

By

Published : Mar 14, 2019, 7:44 PM IST

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சார்ந்தவர் பத்மராஜன். இவர் டயர் ரீடிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற ஒரு தீராத ஆசை காரணமாக நாடாளுமன்ற தேர்தல், சட்ட மன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் வரை இவர் பல தேர்தல்களில் வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் 199வது முறையாக பத்மராஜன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மேட்டூர் சட்டமன்ற தொகுதி தருமபுரி நாடாளுமன்ற தொகுதியோடு இணைந்துள்ளதால் பத்மராஜன் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் 200 ஆவது முறையாக வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேர்தல் மன்னன் பத்மராஜன், "இதுவரை 199 முறை போட்டியிட்டுஉள்ளேன். 1988ம் ஆண்டு முதல் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன். பிரதமராக இருந்த வாஜ்பாய், நரசிம்மராவ், நரேந்திர மோடி இவர்கள் போட்டியிட்ட தொகுதிகளிலும், தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதிகளிலும், ஐந்து முறை குடியரசுத் தலைவர் தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன்", என்கிறார்.

வரும் செவ்வாய்க்கிழமை தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள இவர் கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details