சந்தனமரங்களை வெட்டிய இரண்டு பேர் கைது - சந்தன மர கடத்தல்
சேலம்: டேனிஷ்பேட்டை அருகே சந்தனமரங்களை வெட்டிய இரண்டு பேரை வனத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
![சந்தனமரங்களை வெட்டிய இரண்டு பேர் கைது சந்தன மரம் வெட்டியவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-01:26:29:1601366189-tn-slm-01-sandel-kidnap-arrested-vis-pic-script-7204525-29092020131409-2909f-1601365449-572.jpg)
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி தாலுகா பகுதியில் லோக்கூர் காப்புக்காடு உள்ளது. இங்கு சந்தன மரங்கள், சேலம் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி சில நபர்கள் டேனிஷ் பேட்டை காப்புக் காட்டில் சந்தன மரங்களை வெட்டி எடுத்து சென்றனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த வன பாதுகாவலர்கள் விரைந்து சென்று அங்கு பார்த்தபோது மூன்று சந்தனமரங்கள் வெட்டி எடுத்து சென்றது உறுதிபடுத்தப்பட்டது.
இதுதொடர்பாக சேலம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து டேனிஷ்பேட்டை வனசரக அலுவலர் பரசுராமமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் காடையாம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த கண்ணப்பாடியில் வசிக்கும் சுந்தரம் (31), பண்ணப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவிந்தராஜ் (33) இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.