சேலம்:சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கள்ளச்சாராய தடுப்பு பிரிவு போலீசாரால் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ஜருகுமலை, கஞ்சமலை மற்றும் கல்வராயன் மலை ஆகிய மலைப்பகுதிகளில் இதற்காக, 24 மணி நேரமும் கள்ளச்சாராய தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் விளைவாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கள்ளச்சாராய விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (நவ.11) மதியம், சேலம் மாவட்டம் கருமந்துறை காவல் எல்லைக்கு உட்பட்ட பெரிய கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சேம்பூர் மலைக்கிராமத்தில், கள்ளச்சாராய ஊறல் போடப்பட்டிருப்பது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அப்பகுதியில் மூன்று மணிநேரத்திற்கும் மேலாக, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 இரும்பு பேரல் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களில் போடப்பட்டிருந்த 1,800 லிட்டர் சாராய ஊறல்களைக் கண்டுபிடித்த நிலையில், அவற்றை அங்கேயே அழித்தனர்.
இதையும் படிங்க:கால் வைக்கவும் இடமில்லை..மூச்சு விடவும் இடமில்லை; புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ரயில் வசதி செய்ய கோரிக்கை