தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்த மருத்துவம்: கரோனாவிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பிய 148 பேர்! - 148 Corona patients recovered from siddha medicine

சேலம்: சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் 148 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

salem
salem

By

Published : Sep 5, 2020, 11:02 PM IST

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் கூறுகையில், "சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம், மாநில விவசாய விற்பனைக்கழக பயிற்சி மையத்தில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஆகஸ்ட் 03ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.

இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் 65 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 65 படுக்கைகளுடன், காற்றோட்டமான அறைகள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய கரோனா வைரஸ் (தீநுண்மி) நோய் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தில் இதுவரை கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்குள்ளான 222 நபர்கள் சேர்க்கப்பட்டு சிறப்பாக சித்த மருத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 148 நபர்கள் பூரண குணமடைந்து அவரவர்களின் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 74 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இங்கு சேர்க்கப்படும் கரோனா பாதிப்புக்குள்ளான நோயாளிகள் அனைவருக்கும் உள்மருந்து சிகிச்சையாக 10 நாள்களுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை - தேன் / இஞ்சிசாற்றில் (காலை / இரவு), தாளிசாதி சூரணம் கேப்சூல்ஸ், ஆடாதோடை மணப்பாகு (15 மிலி - இருவேளை), அமுக்கிரா மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் அடங்கிய நுழைவு பெட்டகம் (நுவேசல முவை) வழங்கப்படுகின்றது.

இச்சித்த மருத்துவ மையத்தில் காய்ச்சல், ஆக்ஸிஜன் அளவு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு கண்டறிதல் ஆகிய பரிசோதனைகள் நாள்தோறும் காலை, மாலை இருவேளைகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இம்மையத்தில் மூன்று சித்த உதவி மருத்துவ அலுவலர்கள், இரண்டு செவிலியர், ஒரு மருந்தாளுநர், ஒரு மருத்துவமனைப் பணியாளர் உள்பட சித்த மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து பணிபுரிந்துவருகின்றனர்.

சித்த மருத்துவத்தின் மூலம் ஆவி பிடித்தல் - யூகலிப்டஸ், வேப்பிலை, மஞ்சள், நொச்சி, கற்பூரவல்லி அடங்கிய மூலிகைகளுடன் புறமருந்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன.

மஞ்சள், ஓமம், சுக்கு, மிளகு, வெற்றிலை சாற்றில் அரைத்து துணியில் சுற்றப்பட்ட மஞ்சள் திரிபுகை வழங்கப்படுகின்றன. மேலும், ஓமம், பச்சை கற்பூரம், கிராம்பு, கருங்சீரகம் ஆகியவை அடங்கிய ஓமப் பொட்டணத்தை சுவாசிப்பதன் மூலமாக மணம் தெரியாமையை குணப்படுத்த முடிகிறது.

இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு காலையில் உப்பு, வெந்நீர் கொண்டு தொண்டையை சுத்தம் செய்தலுக்கான சிகிச்சை, நடைப்பயிற்சி, திருமூலர் சித்தர் மூச்சுப்பயிற்சி, மனஅழுத்தத்தை தவிர்க்க யோகா பயிற்சி, வர்மம் முத்திரை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் காலை, மாலை சூரிய ஒளி நடைப்பயிற்சி ஆகியவையும் வழங்கப்படுகின்றன. இந்நோயாளிகளுக்கு காலையில் இஞ்சி, எலுமிச்சை, நெல்லி, புதினா, கருப்பட்டி உள்ளிட்ட பொருள்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட மூலிகை பானம் வழங்கப்படுகின்றது.

இந்த பானம் உடலுக்குத் தேவையான வைட்டமின் - சி சத்துக்களை நோய்த்தொற்றிலிருந்து விரைவாக குணமடைய செய்கிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க காலையில் கபசுரக் குடிநீரும், மாலையில் நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்படுகின்றது.

இச்சிகிச்சை மையத்தில் மதிய உணவாக உளுந்து சாதம், நெல்லிக் காய் சாதம், எள் சாதம், புதினா சாதம், முருங்கை சாம்பார், மிளகு ரசம், மிளகு குழம்பு, காய்கறி கூட்டு சாதம், இஞ்சி ரசம், தூதுவளை பொறியல், தூதுவளை ரசம், பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, மணித்தக்காளிக் கீரை கூட்டு, சீரகத் தண்ணீர், பீன்ஸ் பொறியல், அவரை பொறியல் உள்ளிட்ட சத்துமிக்க மூலிகை உணவுகள் நாள்தோறும் சுழற்சி முறையில் வழங்கப்படுகின்றன.

மேலும், நாள்தோறும் இரவு உணவாக அடை, தோசை, இட்லி, கோதுமை ரவை உப்புமா மற்றும் இரவில் படுக்கும்போது மஞ்சள், மிளகு கலந்த பால் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.
இந்த சித்த மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்ட கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான நபர்களுக்கு சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதால் நோயாளிகள் விரைந்து குணமடைந்துவருகின்றனர்.

அவ்வாறு குணமடைந்து வீடு திரும்பும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்விதமாக சித்த மருத்துவத் துறையின் “ஆரோக்கியம்” திட்டத்தின்கீழ் 15 நாள்களுக்குத் தேவையான 100 எண்ணிக்கைகள் அடங்கிய அமுக்கிரா சூரண மாத்திரைகளும், 250 கிராம் அளவுகொண்ட நெல்லிக்காய் லேகியம் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகின்றன.
எனவே, சேலம் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகும் நபர்கள் சித்த மருத்துவம் பெற்று பூரண குணமடைய இச்சிறப்பு சித்த மருத்துவ மையத்தில் சேர்ந்து சிகிச்சைப் பெறலாம்" என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details