சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே நச்சுவாயனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, லதா தம்பதியின் 14 வயது மகன் சபரி.
இவர் கடந்த 22ஆம் தேதி விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் சிறுவனை தீவிரமாக தேடி வந்தனர்.
இதனிடையே, கடந்த 26ஆம் தேதி சிறுவனின் தாய் லதா பணியாற்றும் துணி கடை உரிமையாளர் சரவணனுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து சிறுவனை கடத்தி வைத்திருப்பதாகவும்; ரூ.50 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகவும் கூறியுள்ளார்.
செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், திருட்டு செல்ஃபோன் என்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் 27ஆம் தேதி மற்றொரு திருட்டு செல்ஃபோன் மூலம் சிறுவனை கட்டிப்போட்டு வைத்துள்ள வீடியோவை சரவணனுக்கு அனுப்பியுள்ளனர்.
நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், சிறுவனை விரைந்து மீட்க ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார்.