தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சித்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்ற 105 பேர் பூரண குணம் - சித்த மருத்துவ சிகிச்சை மையம்

சேலம்: உத்தமசோழபுரம் பகுதியில் உள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 105 பேர் சிகிச்சைப் பெற்று, பூரண குணமடைந்துள்ளனர்.

சித்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்ற 105 பேர் பூரண குணமடைந்தனர்
சித்த மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்ற 105 பேர் பூரண குணமடைந்தனர்

By

Published : Aug 29, 2020, 5:19 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மாவட்டம்தோறும் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் சித்த மருத்துவ சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டு, செயல்பட்டு வருகிறது. 65 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வரும் இந்த மையத்தில், கரோனா வைரஸ் தொற்று பாதித்த 154 பேர் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று (ஆகஸ்ட் 28) வரை 105 பேர் சிகிச்சை முடிந்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட சித்த மருத்துவர் கோ.செல்வமூர்த்தி கூறுகையில், "உத்தமசோழபுரம் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு கபசுரக் குடிநீர், யோகா பயிற்சி, காலை உணவு, சுண்டல், மதிய உணவு, மாலை மூலிகை தேநீர், இரவு உணவு ஆகியவை நேரம் தவறாமல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மையம் குறித்து கேள்விப்படுபவர்கள், இங்கே தங்கி சிகிச்சைப் பெற ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் உள்ள அனைத்து படுக்கைகளும் தற்போது நிரம்பியுள்ளன. இங்கு அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் விதிமுறைகளை பின்பற்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர், மருந்தாளுநர், பணியாளர் உள்பட 12 பேர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இங்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருத்துவர்களின் ஆலோசனைகள், வழிகாட்டுதல் ஆகியவை சிகிச்சை பெற வருபவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details